எழுத்தின் அளவு: அ+ அ- அ
தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் தேர்வு எழுதிய 7 லட்சத்து 53 ஆயிரத்து 142 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளதாக பள்ளிக்கல்வி துறை அறிவித்துள்ளது.
பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 3ஆம் தேதி தொடங்கி, 25ஆம் தேதி நிறைவு பெற்றது. இந்த தேர்வை மொத்தம் 7 லட்சத்து 92 ஆயிரத்து 494 மாணவர்கள் எழுதினர். இதில், மாணவிகள் 4 லட்சத்து 19 ஆயிரத்து 316 பேரும், மாணவர்கள் 3 லட்சத்து 73 ஆயிரத்து 178 பேரும் தேர்வை எழுதினர். இந்நிலையில் இன்று பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கான முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது. அதன்படி தேர்வு எழுதியவர்களில் 7 லட்சத்து 53 ஆயிரத்து 142 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். 140 சிறைவாசிகள் தேர்வெழுதியதில் 130 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இந்த தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு ஜூன் 25 ஆம் தேதி துணை தேர்வு நடைபெறும் என பள்ளக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதிய மாணாக்கர்களில் 95.05 சதவீதம் பேர் வெற்றி பெற்றுள்ளனர். இதில் மாணவிகள் 96.76 சதவீதமும், மாணவர்கள் 93.16 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம்போல் மாணவர்களை விட மாணவிகளே 3.54 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பிளஸ் 2 தேர்வில் தமிழ் பாடத்தில் 99.15 சதவீதம் மாணாக்கர்கள் முழு மதிப்பெண் பெற்றுள்ளனர். கணிதத்தில் 99.16 சதவீதம் மாணாக்கர்களும், இயற்பியலில் 99.22 சதவீதம் மாணாக்கர்களும், வேதியியல் பாடத்தில் 98.99 சதவீதம் மாணாக்கர்களும், உயிரியியல் பாடத்தில் 99.15 சதவீதம் மாணாக்கர்களும், கணினி அறிவியல் பாடத்தில் 99.73 சதவீதம் மாணாக்கர்களும் முழு மதிப்பெண்களுடன் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவுகளில் மாவட்ட அளவில் அரியலூர் 98.82 சதவீதம் மாணாக்கர்கள் தேர்ச்சி பெற்று முதலிடத்தில் உள்ளது. ஈரோடு மாவட்டம் 97.98 சதவீதமும், திருப்பூர் மாவட்டம் 97.53 சதவீதமும், கோயம்புத்தூர் மாவட்டம் 97.48சதவீதமும், கன்னியாகுமரி மாவட்டம் 97.01 சதவீதமும் தேர்ச்சி பெற்று முதல் 5 இடங்களில் உள்ளன.
பிளஸ் 2 தேர்வில் பாடவாரியாக தமிழ் பாடத்தில் 135 மாணாக்கர்கள் முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். கணிதத்தில் 3,022 மாணாக்கர்களும், இயற்பியல் பாடத்தில் 1,125 மாணாக்களும், வேதியியல் பாடத்தில் 3,181 மாணாக்கர்களும், உயிரியியல் பாடத்தில் 827 மாணாக்கர்களும், கணினி அறிவியியல் பாடத்தில் 9,536 மாணாக்கர்களும் முழு மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர்.